(1) நீக்கப்பட, மாற்றப்பட அல்லது சேர்க்கப்பட வேண்டிய ஏற்பாடும், விளைவுத் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவையும் சட்டமூலத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டு, அதன் நீள் தலைப்பில் அரசியலமைப்பின் திருத்தத்திற்கான சட்டம் என விவரிக்கப்பட்டாலன்றி, அரசியலமைப்பின் எந்த ஏற்பாட்டையும் திருத்துவதற்கான எந்தச் சட்டமூலமும் பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்படலாகாது.
(2) அரசியலமைப்புக்குப் பதிலீடான ஏற்பாடுகளைக் கொண்டிருந்து, அதன் நீள் தலைப்பில் அரசியலமைப்பை நீக்கி மாற்றீடு செய்வதற்கான சட்டம் என விவரிக்கப்பட்டாலன்றி, அரசியலமைப்பை நீக்குவதற்கான எந்தச் சட்டமூலமும் பாராளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்படலாகாது.
(3) சபாநாயகரின் கருத்துப்படி, சட்டமூலம் இந்த உறுப்புரையின் (1)ஆம் அல்லது (2)ஆம் பந்தியின் தேவைப்பாடுகளுக்கு இணங்கவில்லையாயின், அத்தேவைப்பாடுகளுக்கு இணங்குமாறு திருத்தப்பட்டாலன்றி அச்சட்டமூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படலாகாது என அவர் பணிப்பார்.
(4) இந்த உறுப்புரையின் முன்னைய ஏற்பாடுகளில் என்ன இருந்தபோதிலும், (1)ஆம் அல்லது (2)ஆம் பந்தியின் தேவைப்பாடுகளுக்கு இணங்கும் சட்டமூலத்தை பாராளுமன்றம் திருத்துவது சட்டமுறையானது; ஆயினும், அவ்வாறு திருத்தப்பட்ட சட்டமூலம் அத்தேவைப்பாடுகளுக்கு இணங்குதல் வேண்டும்.
(5) அரசியலமைப்பின் எந்த ஏற்பாட்டையும் திருத்துவதற்கான அல்லது அரசியலமைப்பை நீக்கி மாற்றீடு செய்வதற்கான சட்டமூலம், அதற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை (வருகை தராத உறுப்பினர்கள் உட்பட) மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டுக்குக் குறையாமல் இருந்து, 80ஆவது அல்லது 79ஆவது உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு அமைய, சந்தர்ப்பத்திற்கேற்ப சனாதிபதியால் அல்லது சபாநாயகரால் சான்றிதழ் பொறிக்கப்பட்டதும் சட்டமாகும்.
(6) இந்த உறுப்புரையின் முன்னைய ஏற்பாடுகளின் தேவைப்பாடுகளுக்கு அமைய இயற்றப்பட்டாலன்றி, எந்தச் சட்டத்திலும் உள்ள எந்த ஏற்பாடும் அரசியலமைப்பை அல்லது அதன் எந்த ஏற்பாட்டையும் திருத்தவோ, நீக்கவோ, மாற்றீடு செய்யவோ மாட்டாது; அவ்வாறு செய்வதாகக் கருதப்படவோ, விளக்கப்படவோ, பொருள்கொள்ளப்படவோ கூடாது.
(7) இந்த அத்தியாயத்தில் "திருத்தம்" என்பதில் நீக்கம், மாற்றம் மற்றும் சேர்த்தல் அடங்கும்.